பதியுத்தீன் மஹ்மூதும் கம்பளை ஸாஹிராவும்
கலாநிதி பதியுத்தின் மஹ்மூத் அவர்களின் வாழ்க்கைச் சரிதையில் பாதிக்கு மேல் கம்பளை ஸாஹிராக் கல்லூரியுடன் தொடர்புடைய சம்பவங்களே என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை. கம்பளை ஸாஹிராவில் அதிபராகப் பணியாற்றிய காலத்திலும் சரி அதற்குப் பின் உயர் பதவிகள் வகித்த காலத்திலும் சரி ஸாஹிராவையும் தன்னுடன் இணைத்துப் பணியாற்றும் பழக்கத்தை அவர் கொண்டிருந்தார். அமெரிக்காவில் ஐ. நா. வின் இலங்கைப் பிரதிநிதியாக பணியாற்றிய காலத்தில் நியுயோர்க்கில் அவரது பணியகத்திலும் அவர் அமரும் ஆசனத்தின் முன்னும் இலங்கைக்கான ஐ.நா. பிரதிதிதி. திரு. பதியுத்தீன் மஹ்மூத், அதிபர், கம்பளை ஸாஹிராக் கல்லூரி என்றே பொறிக்கப்பட்டிருந்தது. அவர் எங்கு சென்றாலும் ஸாஹிராவையும். அங்கு கொண்டு சென்றார். அந்த அளவு "ஸாஹிரா” என்ற நாமம் அவர் உயிரோடு இணைந்திருந்தது.
இரண்டாவது உலக யுத்தம் ஆரம்பித்த பொழுது, கொழும்பில் வாழ்ந்த மக்கள் கிராமப்புறங்களுக்குக் கூடிபெயர வேண்டி ஏற்பட்டது. கொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் கற்றுக் கொண்டிருந்த வெளியூர் மாணவர்களும் தத்தமது பிரதேசங்களுக்குச் செல்ல வேண்டியேற்பட்டது. இதைச் சாதகமாகப் பயன்படுத்தி அல்ஹாஜ் டி.பி. ஜாயா, எல்லா மாகாணங்களிலும் கொழும்பு ஸாஹிராவின் கிளைகளை ஆரம்பித்தார். அவ்வாறானதொரு கிளை கம்பளையில் 1942 மே 15ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
கம்பளை நகர ஜும்ஆப் பள்ளிவாசல் வழங்கிய ஏழு ஏக்கர் நிலப்பரப்பில் ஸாஹிராக் கல்லூரி இயங்கத் தொடங்கியது. இதனை ஆரம்பிப்பதில் எம். எஸ். செய்யத் முஹம்மத், ஓமர் பாச்சா ஆகியோர் பெரிதும் துணையாயிருந்தனர். கொழும்பு ஸாஹிராவே பிரதானமானதும், ஏனையவை அதன் கிளைகளே எனும் கொள்கைக்கேற்ப டி. பி. ஜாயாவே இதன் அதிபராகவும், செய்யித் ரவூப் பாஷா அவர்கள் உதவி அதிபராகவும் கடமையாற்றினர்.
இலங்கை பல்கலைக் கல்லூரியில் புவியியல் விரிவுரையாளராக செல்வதற்கு, உத்தேசித்திருந்த புவியியல் முதுநிலைப் பட்டதாரியான இளைஞர் பதியுத்தின் தமது அபிமான ஆசிரியர் டீ.பீ. ஜாயா அவர்களினதும் இன்னும் பலரினதும் அன்புக்கட்டளைக்கு அடிபணிந்து 1944ம் ஆண்டு அக்டோபர் 1ம் திகதி கம்பளை ஸாஹிராவின் உப அதிபராகப் பதவியேற்றார். ஓர் ஒலைக்கட்டிடமும் 167 மாணவர்களும் தான் அன்றைய ஸாஹிராக் கல்லூரி.
கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் கிளையாக இயங்கி வந்த கம்பளை ஸாஹிரா கல்லூரியை ஒரு சில வருடங்களில் சுயமாக தனித்தியங்கும் பாடசாலையாக அவர் மாற்றியமைத்தார். அத்துடன் பள்ளிவாசலுக்கு சொந்தமாயிருத்த அத்த நிலத்தில் சுமார் 4 ஏக்கர் நிலத்தை ஸாஹிராக் கல்லூரிக்காகப் பெற்றுக் கொள்வதில் பதயுத்தின் மஹ்மூத் வெற்றியடைந்தார். அதற்கு உறுதுணையாகவும் பக்கபலமாகவும் இருந்தவர், அன்றைய பள்ளிவாசல் டிரஷ்டியாக விளங்கிய பெரியார் உமர் பாச்சா அவர்களாவார். இதன் மூலம் பாடசாலையை விஸ்தரிக்கவும் அபிவிருத்தி செய்யவும் வழியேற்பட்டது.
முதன் முதலில் ஊர்மக்களினதும் பெற்றோரினதும் ஆதரவுடன் ஒரு சிறு கட்டிடம் கட்டப்பட்டது. இதற்கிடையில் பதியுத்தின் அவர்கள் கம்பளையிலும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களிலும் வாழ்ந்த முஸ்லிம் மக்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தையும் ஸாஹிரா போன்ற ஒரு பாடசாலையை வளர்த்துக் கட்டிக் காக்க வேண்டிய அவசியத்தையும் உணர்த்தி வந்ததோடு எமது கலாசார பின்னணியில் எமது சமூகத்துக்குப் பயன்படும் வகையில் சிறந்த முஸ்லிம் கல்விமான்களை உருவாக்க வேண்டுமானால் அதற்கு. இது ஒன்றே வழி என்பதையும் விளக்கினார். ஒவ்வொரு வாரமும் ஜும்ஆத் தொழுகையின் பின்னர் ஒவ்வொரு பள்ளிவாசல்களிலும் வீடு வீடாகவும் சென்று இக்கருத்தை வலியுறுத்தி ஸாஹிராவுக்கு பிள்ளைகளை சேர்ப்பதில் தனது ஓய்வு நேரத்தின் பெரும் பகுதியை செலவிட்டார். உமர்பாச்சா போன்ற பிரமுகர்களும் அவரது முயற்சிக்குப் பக்கபலமாக செயல்பட்டனர்.
அவரது அயராத முயற்சியின் காரணமாக ஸாஹிராக் கல்லூரியில் மாணவர் தொகை கொஞ்சம் கொஞ்சமாகப் பெருக ஆரம்பித்தது. நாளடைவில் முஸ்லிம் பெண்களும் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து அக்கல்லூரியில் சேர்ந்து கற்க முன்வந்தனர். இதனால் அடிக்கடி பாடசாலையில் இடப் பிரச்சினை தோன்றியது. எனவே நிலையான பாடசாலைக் கட்டிடமொன்றின் தேவையை உணர்ந்த பதியுத்தீன் அவர்கள் ஜனாப் உமர் பாச்சா அவர்களிடம் சென்று நிலைமையை விளக்கினார். அவரும் தாராள மனதுடன் தன்னிடமிருந்த ஒரு மாணிக்கக்கல்லை பதியுத்தீன் அவர்களிடம் கொடுத்து முடியுமானால் அதனை விற்பனை செய்து கிடைக்கும் இலாபத்தை அதற்குப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டார். அவர் அதனை கொழும்பில் ஒரு பரோபகாரிக்கு விற்பனை செய்து அதன் மூலம் லாபமாகம் கிடைத்த ரூ 32000/- பணத்தைக் கொண்டு இன்று தலை நிமிர்ந்து நிற்கும் பிரதான மண்டபத்தைக் கட்டுவித்தார். அதனைத் தொடர்ந்து கொழும்பைச் சேர்ந்த ஒரு கொடை வள்ளல் மூலம் பெறப்பட்ட ரூ 15000/- நன்கொடை மூலம் விஞ்ஞான ஆய்வு கூடமொன்றையும் கட்டி முடித்தார். பின்னர். இக்கட்டிடத் திறப்பு விழாவில் பங்கு கொண்ட 15 பிரமுகர்களின் உதவியினால் மேலும் 15 வகுப்பறைகள் கொண்ட ஆரம்ப வகுப்பு மாணவர்களுக்கான ஒரு கட்டிடமும் கட்டப்பட்டது. இவ்வாறு ஸாஹிராக் கல்லூரிக்கான ஆரம்பக் கட்டிடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் பதியுத்தீன் அவர்கள் வெற்றி கண்டார்.
கம்பளை ஸாஹிராக் கல்லூரி ஒரு முஸ்லிம் பாடசாலையாக இருந்த போதிலும் சிங்கள, தமிழ் மாணவர்களும் தாராளமாக சேர்த்துக் கொள்ளப்பட்டனர். பணக்காரன் ஏழை என்ற பேதம் அங்கு காணப்படவில்லை. தோட்டத் தொழிலாளரின் பிள்ளைகளும் அங்கு அனுமதி பெற்றனர். ஆங்கிலம், தமிழ், சிங்கள மொழி மூல வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டு விரும்பிய மொழியில் கற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. ஆசியர் குழுவில் கூட முஸ்லிம், சிங்களவர், தமிழர், மலாயர், பறங்கியர், இந்தியர் எனப் பல இனத்தவகும் இடம் பெற்றிருந்தனர். சுருக்கமாகச் சொன்னால் தேசிய ஒற்றுமைக்கு ஓர் எடுத்துக்காட்டாக அன்று ஸாஹிராக் கல்லூரியை வடிவமைத்திருந்தார் பதியுத்தீன்.
அன்று கம்பளையில் கொடிகட்டிப்பறந்த கிறிஸ்தவ, பெளத்த பாடசாலைகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில் கல்வித் துறையில் மட்டுமன்றி விளையாட்டுத்துறையிலும் கலை இலக்கியத் துறையிலும் அதனை உயர்வடையச் செய்தார். இக்காலத்தில் முஸ்லிம் பெண்களின் கல்வி விடயத்திலும் அக்கறை காண்பிக்கப்பட்டது. ஸாஹிராவில் இஸ்லாமியப் பின்னணியில் கல்வி கற்பிக்கப்பட்டதால் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த முஸ்லிம் பெண்கள் ஸாஹிராவில் சேர்ந்து கல்வி கற்க முன்வந்தனர்.
இன்று இலங்கை எங்கணும் முஸ்லிம் மாணவிகளினால் அணியப்படும் பஞ்சாபிய உடையை இந்நாட்டில் முதன்முதல் அறிமுகம் செய்தவர் பதியுத்தீனேயாவார். கம்பளை ஸாஹிராக் கல்லூரியின் அதிபராய் இருந்த காலத்தில் தனது கல்லூரி மாணவிகள் அவ்வுடையை அணியும் பழக்கத்தினை ஏற்படுத்தினார். ஆரம்பத்தில் அதனைப் பலர் எதிர்த்தனர். ஆனால் காலக்கிரமத்தில் சிறப்பான, ஒழுங்கான ஓர் உடையாக இது ஏற்றுக்கொள்ளப் பட்டு இன்று நாடு முழுவதிலும் பொதுவான ஓர் உடையாகக் கைக்கொள்ளப் படுகிறது.
பதி அவர்கள் அக்காலத்தில் அரசியலில் கூடிய ஈடுபாடு காட்டி வந்தார். எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவின் உற்ற நண்பராக அவர் இருந்ததே அதற்கு முக்கிய காரணம். என்றாலும் அவரிடம் சமூகப் பற்றே எல்லாவற்றையும் விஞ்சியதாக காணப்பட்டது. எனவே தான் 1956ல் தன்னை நாடி வந்த அமைச்சர் பதவியையும் ஏற்க மறுத்து ஸாஹிராவின் அதிபராக தனது பதவியைத் தொடர்ந்தார். அன்று குழந்தைப் பருவத்திலிருந்த ஸாஹிராவை அநாதையாக விட்டுச் செல்ல அவர் மனம் ஒப்பவில்லை. 1944லில் ஓர் ஓலைக் கட்டிடத்தைப் பொறுப்பேற்ற 'பதி' அவர்கள் 1960ல் அதாவது 15 வருட காலத்துக்குள் அகில இலங்கையில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் கூட பிரபல்யம் பெற்று அனைவராலும் பேசப்படும் ஒரு பாடசாலையாக இன்னொரு அதிபரிடம் ஒப்படைத்தார்.
அங்கு கல்வி கற்றவர்கள் இலங்கையில் மட்டுமன்றி உலகன் பல பகுதிகளிலும் பணி புரிந்து தாம் கற்ற கல்லூரிக்கு கீர்த்தியைப் பெற்றுக் கொடுத்தனர். 1967ம் ஆண்டு கம்பளை ஸாஹிரா தனது வெள்ளி விழாவைக் கொண்டாடிய போது அன்றைய பிரதமர் டட்லி சேனநாயக்கா அவர்களின் முன்னிலையில் பதி பேசும் போது,
“ இக் கல்லூரியில் கல்வி பயின்ற மாணவர்கள் பணத்தையும் அரசியலையும் விட மனித நேயத்துக்குத் தான் முக்கியத்துவமும் முன்னுரிமையும் கொடுப்பவர்கள்” எனக் சூறிப்பிட்டார்.
ஸாஹிராக் கல்லூரியின் வளர்ச்சி தானாக ஏற்பட்டதொன்றல்ல. அதற்கு பதியின் உழைப்பும் உதிரமும் உரமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. பல இன்னல்களுக்கும் தொல்லைகளுக்கும் அவர் முகம் கொடுத்தார். பலர் அவரை அங்கிருந்து அகற்றிவிடவும் ஓரங்கட்டவும் முயன்றனர். பல பொய்ப் பிரசாரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. ஆனால் இதையெல்லாம் தனது ஆளுமையின் பலத்தால் வெற்றி கொண்ட அதிசய மனிதராக அவர் உயர்ந்து நின்றார்.
1960ல் அவர் கல்வியமைச்சராகப் பதவியேற்றதும் அக்கல்லூரியின் தலை விதியையே மாற்றியமைத்தார். 1960-1965 காலப் பகுதிக்குள் அப்பாடசாலைக்காக 31 மில்லியன் ரூபா செலவிட்டு சுமார் 22 கட்டிடங்களைக் கட்டுவித்தார். இக்காலம் ஸாஹிராவின் மறுமலர்ச்சிக் காலம் எனலாம். இலங்கையிலிருந்த மிகத்திறமை வாய்ந்த ஆரிசியர்களாலும் ஆர்வமும் ஆற்றலும் மிக்க மாணவர்களாலும் அழகிய கட்டிடத் தொகுதிகளாலும் நிரம்பி வழிந்த இக்கல்லூரியே இலங்கையில் முதன் முதலில் தேசிய மயமாக்கப்பட்ட பாடசாலையாகவும் விளங்கியது. இதன் வளர்ச்சி ஏனைய முஸ்லிம் பாடசாலைகளுக்கு ஓர் உத்வேகத்தைக் கொடுத்ததோடு முஸ்லிம் கல்வி வளர்ச்சியில் முன்னோடியாகவும் செயல்பட்டது. இதன் வளர்ச்சி தொடர்ந்திருந்தால் இலங்கையின் அலிகார் பல்கலைக்கழகமாக இக் கல்லூரி உருப்பெற்றிருக்கும் என்பது திண்ணம்.
"அவர் கம்பளை ஸாஹிராக் கல்லூரியை மிகவும் நேசித்தார். இதனால் இங்கு கல்வி கற்பித்த ஆசிரியர்களுக்குள்ள குறைகளை நீக்கிவைப்பதிலும் இவர் கவனஞ் செலுத்தினார். அலிகார் பல்கலைக்கழகப் பாணியில் இதனை அமைத்துக் கொடுப்பதில் இவருக்குத் தனி ஆர்வம் இருந்தது. இதில் அவர் வெற்றி பெற்றார். அரபு நாடுகளும் இக்கல்லூரியின் வளர்ச்சிக்கு உதவின. இங்கு ஒரு கலாசார நிலையம் உருவாக்கப்பட்டது. சிறந்த ஒரு நூலகமும் ஏற்படுத்தப் பட்டது. பல முஸ்லிம் நாடுகளும் நூல்களை அன்பளிப்புச் செய்திருந்தன.” என்ற காலிதீன் கே. எம். எச் அவர்களது கருத்து (யாழ்பிறை-1981, ப-13) மிகவும் சரியானது.
மாத்தறையைப் பிறப்பிடமாகக் கொண்டு கொழும்பிலும் அலிகாரிலும் கல்வி கற்று பல உயர் பதவிகள் வகித்து, உலகின் பல பகுதிகளையும் சுற்றி வந்த பதி இறுதியில் கம்பளையில் தனது இருப்பிடத்தை அமைத்துக் கொண்டார். அவர் ஸாஹிராவை விரும்பியதாலேயே கம்பளையை விரும்பினார். தனது வீட்டையும் அங்கேயே அமைத்துக் கொண்டார். தன்னை அங்கேயே அடக்கம் செய்ய வேண்டும் என்ற தனது இறுதி ஆசையையும் வெளியிட்டார். அவரது இறுதி ஆசை நிறைவேறா விட்டாலும் ஸாஹிராவைப் பற்றி அவர் கண்ட கனவை நினைவாக்குவது தான் நாம் அவருக்கு செய்யும் நன்றிக் கடனாகும்.
அவர் மறைத்தாலும் அவர் அமைத்துத் தந்த ஸாஹிரா வளாகத்தின் ஒவ்வொரு கட்டிடமும் அங்குள்ள பொருட்களும், அந்த அழகிய மலையடிவாரத்தில் வீசும் தென்றலும் கூட பதி பற்றிய நினைவுகளை மீட்டிக் கொண்டேயிருக்கும். அந்த வளாகத்துக்குள் நுழையும் ஒவ்வொருவரையும் பதியின் நினைவுகளே ஆட்கொள்ளும் அளவுக்கு அவர் சேவைகள் அங்கு செயல் வடிவம் பெற்று விளங்குகன்றன.
ஒரு முஸ்லிம் அரசியல்வாதி எந்த அளவுக்குத் தனது சமூகத்துக்குச் சேவை செய்யலாம் என்பதற்குப் "பதி' ஒரு சிறந்த உதாரணம்.
நன்றி - முஹம்மத் ரஸீன், எஸ். எச். எம். ஜெமீல்.


Everyone should know this👏👌
ReplyDelete